[PDF] ராயர் காப்பி கிளப்-இரா.முருகன் book pdf free download

Raayar Kaapi klub (Tamil Edition)

Tamil Edition by Era.Murukan

(2004-இல் அச்சுப் பதிப்புக்கு எழுதியது)

இணையத்தில் (இண்டெர்நெட்) உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கலந்துரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்ய இணையக் குழுக்கள் கடந்த பத்தாண்டாகவே செயல்படுகின்றன. எனினும் இலக்கியத்துக்காக ஓர் இணையக் குழு இல்லாததை ஈடு செய்ய 2002-ல் தொடங்கப்பட்டது ‘ராயர் காப்பி கிளப்’ இணையக்குழு (www.groups.yahoo.com/raayarkaapiklub).

தமிழ் எழுத்தாளர்களால், தமிழ் வாசகர்களோடு ஊடாடத் தொடங்கப்பட்ட ஒரே குழு இது என்பது இன்னொரு முக்கியமான செய்தி. என்னோடு, சக எழுத்தாளர்களான என்.சொக்கன், ஆர்.வெங்கடேஷ், பா.ராகவன், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ஆகியோரும், பழந்தமிழ் இலக்கியத்திலும், பாரதியிலக்கியத்திலும் புலமை மிகுந்த கவிஞர் ஹரிகிருஷ்ணன் போன்றோரும் தொடங்கி முன்னெடுத்துப் போன, போய்க் கொண்டிருக்கும் முதன்மை இணைய இலக்கியக் குழு இது. எழுத்தாள நண்பர்கள் மாலன், ‘புலிநகக் கொன்றை’ பி.ஏ.கிருஷ்ணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு, நாகூர் ரூமி, ஓவியர் நாகராஜன் போன்றோரும் அறிவியலையும் இலக்கியத்தையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டு நிறுத்த முனைந்து இயங்கும் அறிவியலாளர்கள் பலரும் – இந்தப் பட்டியல் எலக்ஷன் மீட்டிங் வரவேற்புரை போல் நீண்டு கொண்டே போகும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்- குழுவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

தற்காலத் தமிழ் இலக்கியம், மரபுத் தமிழ் இலக்கியம், மலையாளம், ஆங்கிலம் போன்ற பிற மொழி இலக்கியங்கள், நுண்கலைகள் ஆகியவை குறித்த வாசிப்பு, நுகர்வு அனுபவத்தைப் பரவலாக்குவது மட்டும் ராயர் காப்பி கிளப்பின் லட்சியமில்லை. படைப்பாளிக்கும் வாசகருக்குமான இடைவெளியை ஆகக் குறைத்து ஒரே தளத்திலிருந்து உரையாடி மகிழ, படைப்பு பற்றிய அணுகலை, புரிதலை, ஆக்கபூர்வமான விமர்சனத்தை வழிநடத்திப்போக, இன்னும் முக்கியமாக புதிய தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்குவித்து உருவாக்க என்ற பரந்துபட்ட நோக்கங்களோடு மின்னுலகில் தொடங்கப்பட்ட முதல் இணையக்குழு ராயர் காப்பி கிளப்.

எழுத்தாளனை மேடை போட்டு உயரத்தில் அமர்த்தி வாசகரை அகற்றி நிறுத்திக் கைகட்டி வாய்பொத்தி ஞானத் தெளிவு பெற முயற்சிகள் மேற்கொள்ளாமல், ஓட்டலில் ஒரே மேஜையில் எதிர் எதிர் நாற்காலிகளில் உட்கார்ந்து காப்பி குடித்தபடியே இலக்கியமும், கலையும் பேசுகிற இடம் இது. பல வருடம் முன் மைலாப்பூரில் சங்கீத வித்வான்களும், எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் சிற்றுண்டிக்கும், காப்பிக்குமாக வந்து, ரசிகர்களோடு கலந்து பழகிக் கலகலப்பாக இருந்த ராயர் கிளப் என்ற அசல் உணவு விடுதி இந்தப் பெயரை நாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்.

உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் கிட்டத்தட்ட இருநூற்றைம்பது பேர் அங்கத்துவம் வகிக்கும் ராயர் காப்பி கிளப்பில் நான் எழுதிய பலவும், விரிவான வாசகத் தளத்தையும் பெற வேண்டி நண்பர் எழுத்தாளர் கோ.ராஜாராமின் திண்ணை இணைய இதழில் (www.thinnai.com) அவ்வப்போது பிரசுரமாயின. ‘திண்ணை’க்கும், ‘திசைகள்’ இதழுக்கும் என் நன்றிகள்.

ராயர் காப்பி கிளப்பின் இலக்கியத் தேடலின் நீட்சியாக மாலனின் திசைகள் இலக்கிய இயக்கம் இன்று தமிழகமெங்கும் இலக்கியப் பிரக்ஞையை வளர்க்கும் களப்பணியில் ஈடுபட்டுப் பெருவெற்றி பெற்றுள்ளது. ராயர் காப்பி கிளப்பின் பல உறுப்பினர்களும் இந்த இயக்கத்தில் உற்சாகமாகப் பங்கு பற்றி இலக்கியப் பணி செய்து வருகிறார்கள். கிளப்பில் எழுதத் தொடங்கி, இப்போது அடுத்த தலைமுறைக்கு குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது கிடைத்திருக்கிறார்கள். ராயர் காப்பி கிளப் தொடங்கிய நோக்கம் நிறைவேறியபடியே இருப்பதைச் சுட்டிக்காட்டி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவண்ணம் இந்த என்னுரையை முடிக்கிறேன்.

இந்தப் பதிப்புக்காக எழுதியது இனி –

நூலின் அச்சுப் பதிப்பை 2004-இல் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி.

இந்த நூலின் அச்சுப் பதிப்புக்கு (கிழக்கு பதிப்பக வெளியீடு) என் அன்பு நண்பரும், ’திண்ணை’ இலக்கிய இணைய இதழ் ஆசிரியருமான திரு கோ.ராஜாராம் அருமையான ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அச்சுப் பிரதி என்னிடம் இல்லாத காரணத்தால் அதை இந்த மின்னூல் பதிப்பில் சேர்க்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

-இரா.முருகன்

ராயர் காப்பி கிளப் (Tamil Edition) by [இரா.முருகன்]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்